குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் யோசனைகள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் காரணமாகவே நாட்டில் பாரியளவில் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் காத்திரமான யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் நாட்டின் படுகடன் தொகை குறைக்கப்பட்டிருந்தது எனவும், தற்போது அந்த தொகை உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார்
கூட்டு எதிர்க்கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சித் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.