Home இலங்கை யாழில். வாள்வெட்டு சந்தேகநபர்கள் 18 பேருக்கு பிணை

யாழில். வாள்வெட்டு சந்தேகநபர்கள் 18 பேருக்கு பிணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 18 சந்தேக நபர்களுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணை வழங்கப்பட்டது.  யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கின் போதே சந்தேக நபர்களை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

கோப்பாய்  காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவர் மீதான வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் தொடர் விளக்கமறியலில் தடுத்து வைக்கபட்டு இருந்தனர்.

அதில் ஆவா குழுவை சேர்ந்த பிரதான நபர்களில் ஒருவரான நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ். நிஷாந்தன் உள்ளிட்ட ஆவா குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.  அதேவேளை யாழில்.கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில்  நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

யாழில்.கடந்த வாரம் 08 இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் 10 பேர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த வாள் வெட்டு சம்பவங்களை அடுத்து யாழில் பதட்டம் உருவாகி இருந்தது.

அதனை தொடர்ந்து வாள் வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட காவல்துறை பிரிவுகள் வீதிக்கு இறக்கப்பட்டு , காவல்துறை சுற்றுக்காவல்கள் அதிகரிக்கப்பட்டு வீதி சோதனை நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டதுடன் யாழ். மாவட்ட காவல்துறையினரின்  விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டன.

யாழ்.மேல் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை வாள் வெட்டு சந்தேகநபருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின் போது அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் யாழில் அதிகரித்துள்ள வாள் வெட்டு சம்பவங்களின் மத்தியில் தற்போது பிணை வழங்கினால் மேலும் வாள் வெட்டுக்கள் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டி பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தாதனை அடுத்து மேல்.நீதிமன்ற நீதிபதி பிணையை இரத்து செய்தார்.

அதேவேளை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், யாழ்.மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அவசர கூட்டம் ஒன்றினை கூட்டி, அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் ,  வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை;மா அதிபர் பாலித்த பெனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொசான் பெனார்ன்டோ, சிரேஸ்ட காவல்துறைஅத்தியட்சகர் செனவிரட்ண, காவல்துறைஅத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ். தலைமை காவல் நிலைய  தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோருடன் கலந்துரையாடினார்.

அதில்,  யாழில். அண்மைக்காலமாக  வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சட்டம் ஒழுங்கிற்கு சவால்விடுகின்ற செயற்பாடகவே காணப்படுகின்றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

எனவே சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரோத, சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு அவசர பணிப்புரையை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More