குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபை அமர்வுகள் ஒத்திவைத்த பின்னர் மாவீரர்களை நினைவு கூருவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் இ. ஆர்னோல்ட் அனுமதி கேட்டதற்கு அவைத்தலைவர் அனுமதி மறுத்துள்ளார். வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. காலை 09.40 மணிக்கு ஆரம்பமான சபை அமர்வுகள் 11. 30 மணியளவில் எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சபையை ஒத்தி வைப்பதாக அவைத்தலைவர் அறிவித்த பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர் இ.ஆர்னோல்ட் மாவீர்களுக்கு சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோம் என கேட்டார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் மாவீரர் நாள் அன்று எல்லோரும் தனித்தனியாகவும் கட்சி சார்பாகவும் அஞ்சலி செலுத்த தானே போகின்றோம். எனவே இன்றைக்கு அது தேவையில்லை என தெரிவித்து சபையை ஒத்திவைத்தார்
வடக்கு கிழக்கில் மாவீரர் வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலும் இல்லங்கள் , மாவீரர்கள் நினைவிடங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.