Home இலங்கை பல்கலைக் கழகத்தில் பால் நிலைச் சமத்துவம் – கணபதி சர்வானந்தா

பல்கலைக் கழகத்தில் பால் நிலைச் சமத்துவம் – கணபதி சர்வானந்தா

by admin

கனடா நகரின் காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான மைக்கல் சான்குயினெற்றி  “குற்றங்களைத் தடுப்பதெப்படி?” என்ற தலைப்பில்  யோர்க் பல்கலைக் கழகச் சட்டத்துறை மாணவர்கள் மத்தியில் பேசும்போது,  “பாலியல் வன்முறைக்கு  பெண்கள் ஆளாகக் கூடாது என்றால், அவள் ஒரு போதும் பல ஆண்களுடன் உடல் உறவு வைத்துக் கொள்ளுகின்ற தரம் தாழ்ந்த பெண்களைப்போல் உடை அணியக் கூடாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது இத்தகைய கூற்றானது பல பெண்களை எரிச்சலூட்டியது. விளைவு  அவர் பேச்சுக் கெதிராக ஒரு போராட்டமே வெடித்தது. கனடாவில் உதயமான SlutWalk  என்ற அந்தப் போராட்டம் தொடர்ந்த மூன்று மாதங்களில் உலகமெல்லாம் பரவியது.

“பாலியல் வன்முறைக்கு ஆளான  பெண்ணே அதற்கான காரணமாக ஒருபோதும் இருக்கக் கூடாது”  என்பது காவல் தறை அதிகாரியான மைக்கலின் கருத்து. அதேசமயம் , “பாலியல் வன்முறைக்கு ஆளான  பெண்ணே அதற்கான காரணமாக ஒருபோதும் இருக்க முடியாது” என்ற எளிய உண்மையை நிலை நாட்டுவதே இந்த SlutWalk எதிர்ப்பியக்கத்தின் முக்கிய நோக்கமாகக் காணப்பட்டது. மேலைத்தேயமானாலும் சரி, கீழைத் தேயமானாலும் சரி , “பெண்கள் மீதான ஆணாதிக்கப் பார்வை என்பது ஒரேபோலத்தான் இருக்கிறது.” என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தது அந்த இயக்கம். இருந்தும், “பெண்கள் அந்த விடயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுகின்ற அதே சமயம் ,  வன்முறைக்கான சூழலை அவர்கள் ஒரு போதும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது”  என்ற  தொனியிலே மைக்கலின் கருத்தைப் பார்க்கலாம்.

அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் குடும்ப வன்முறைகள் காணப்படுகின்றன. சமூகத்தின் எல்லா நிலைகளிலும் இத்தகைய பிரச்சினைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றி்ருக்கிறது.

அண்மையில்  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இது போன்றதொரு விடயம் நடைபெற்றது. அதற்கெதிராக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் ஒரு  போராட்டத்தை நடத்தினர். இப்படியானதொரு விடயம் நடைபெற்றது இது முதல்தடவை அல்ல, பல ஆண்டுகளாக இது போன்ற பல  சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. சில சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதிக்காகக் காத்திருக்கின்றன. அதில் பல வெளிச்சத்துக்கு வராமலே இரகசியமாக மறைக்கப்பட்டிருக்கின்றன. காரணம் குடும்பக் கௌரவம் என்ற  ஒன்றிற்கு முன்னால் இத்தகைய பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாது பாதிக்கப்பட்டோர் கைவிட்டு விடுகின்றனர். இதுபோன்ற  மறைப்பிற்கு எமது சமூக மனோ இயல்பும் ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்ப்படுகிறது. அத்துடன்  இத்தகைய குற்றங்களைச் செய்கின்றவர்களுக்கு இது போன்ற மறைப்புகள் பாதுகாப்பளிப்பதாகவும் நம்பப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற விடயத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறைப்பாடு கூட இந்த அடிப்படையிலேயே மீளப் பெறப்பட்டிருக்கிறது – என்ற விடயத்தை யாழ். பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் எமக்குச் சொல்லியிருக்கிறார்.

“இது போன்ற விடயங்கள் இனிமேல் நடக்க வாய்ப்புகள் குறைவு” என்கிறார் மகப்பேற்று  நிபுணரான வைத்திய கலாநிதி. கே. குருபரன். தற்போது யாழ்.பல்கலைக் கழகத்தின் இரண்டாவது மாடியிலமைந்துள்ள சுகாதராக் கூடத்தில் இது போன்ற விடயங்களை – பாலியல் மற்றும் பால் நிலைசார் வன்முறைகளைத் தடுப்பதற்காக , அதை முறைப்பாடு செய்வதற்கான ஒரு “முறைப்பாட்டு மேசை” ஒன்றை அவர் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கின்றனர் . அதாவது Gender Equity and Equality Centre (GEEC) – பாற் சமபங்கு மற்றும் சமநிலை மையம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப் பட்டிருக்கும்  இந்த மையமானது கடந்த ஓக்டோபர் 12 ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. பின்னர்  யாழ். பல்கலைக் கழகத்திலுள்ள கைலாசபதி அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் அது தொடர்பான சட்ட வரைபு வெளியிடப்பட்டுக் கொள்கை விளக்கமும் அளிக்கப்பட்டதோடு  அதற்குரிய இணைத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு சமூகத்தை நீதி நிறைந்த சமூகமாக நிலை நிறுத்தவேண்டும்  என்ற  விருப்புள்ள பலர் கலந்து கொண்டனர் என்றது குறிப்பிடப்பட வேண்டியதொன்று. கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அனைவரும் திறந்த மனதோடு எதுவித முன்னழுத்தமும் இல்லாது பேசியதே ஒரு பாரிய மாற்றத்திற்குரிய அறிகுறியென்று கண்டோம். ஏனெனில் இதற்கு முன்பு, யாழ். பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தொடர்பான செயற்பாடுகளில் பல்கலை மற்றும் அது சார்ந்தவர்களே உள்ளடக்கப் பட்டிருந்தனர். இதுவே, அவற்றினூடாக எடுக்கப்பட்ட விசாரணைகள்  பெரும்பாலும் வெற்றிபெறாது போனதற்குக் காரணம் எனலாம். ஆனால் இம்முறை GEEC  இல்  பல்கலைக் கழகத்தின் சகல மட்டங்களிலும் உள்ளவர்களோடு  அதே அளவு வெளியாரும் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர்.

பல கால பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மையமும் அதன் செயற்பாடும் முன்பு போலல்லாது பல் கலைச் சமூகத்திற்கு மிகவும் நம்பிக்கையூட்டி இருப்பதாகக் கருதப்படுகிறது.

எனவே இந்த மைய உருவாக்கத்தின் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் வைத்திய  கலாநிதி குருபரனைச் சந்தித்து அது பற்றிய கருத்தைக் கேட்டோம்.

“ இந்த அமைப்புக்காக ஒரு சட்ட வரைபை ஏற்ப்படுத்த வேண்டியிருந்தது. அதில் கடந்த காலத்தே தோன்றி மறைந்த சம்பவங்களில் பெற்றுக் கொண்ட பாடங்களைினூடாகப் கற்ற  அனுபவத்தை முன்னிறுத்தி அதில் உள்ள பின்னூட்டங்களைத் தரவல்ல விடயங்களை அகற்றி இன்னும் இது பற்றிய பல தளத்திலிருந்து பல பேரின் கருத்துகளையும் உள் வாங்கி மிகவும் நுணுக்கமாக இதற்கான  சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறோம். அதை உருவாக்க ஏறத்தாழ நான்கு மாதங்கள் வரை சென்றிருக்கின்றது. இதற்காக 28 பேர் அடங்கிய ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 14 ஆண்களும் 14 பெண்களும் இருக்கின்றனர். இதிலுள்ள 14 பெண் உறுப்பினர்களில்  ஐந்து பேர் பல்கலைக் கழகத்துடன்  தொடர்பற்றவர்கள். அதில் ஒருவர் சட்டத்தரணியாக உள்ளார். அவருக்கு இத்தகைய விடயங்களில் பத்து வருடங்களுக்கு மேலான அனுபவங்களைக் கொண்டவர். மனித உரிமை அமைப்புக்களோடு தொடர்புடையவர். அதே போன்று ஏனைய 4 உறுப்பினர்களும் இது பற்றிய அனுபவங்களையும் தொடர்புகளையும் கொண்டிருப்பவர்கள்.

இதிலுள்ள விசேட அம்சம் என்ன வென்றால் இந்த அமைப்புக் குழுவில் எல்லா மட்டங்களிலும் இருந்து பல தரப்பட்டவர்களை உறுப்பினர்களாக உள்வாங்கியிருக்கிறோம். உதாரணமாக விடுதிக் காவலாளிகள் இரண்டு பேர். பல்கலைக் கழக ஒழுங்கு உத்தியோகத்தர் ஒருவர். அடுத்தது கல்விசாரா ஊழியர்கள் இரண்டு பேர் , மாணவர்கள்  மற்றும் பல்கலைக் கழக நிர்வாக மட்டத்தில் இரண்டு பேர்கள் இடம்பெற்றுள்ளனர். எல்லா மட்டங்களிலிருந்தும் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என்பது தான் எமது செயற்பாட்டின் முக்கியத்துவம்.

இது பற்றிப் பல்கலைக் கழக மானியக் குழுவானது “இத்தகைய விடயங்களுக்காக உங்கள் சூழலையும், உங்களுக்கிருக்கிற பிரச்சினைகளையும் வைத்து உங்களுக்கான ஒரு சட்ட வரைபை நீங்களே உருவாக்குங்கள். அதுவே பொருத்தமானது.”  என்று எமக்கு அறிவுறுத்தல்களைத் தந்திருக்கிறது. எனவே எமக்கானதொன்றை உருவாக்குவதற்கான பணியில் பல சவால்களை எதிர்நோக்கினோம். இதற்கு முக்கியமாக  பேராசிரியர்களான குமுது விஜயவர்த்தன மற்றும் உமா குமாரசுவாமி ஆகியோர் முன்னின்று பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். எனினும் அதன் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டவர்கள் பலர் பின்னணியில் இருக்கிறார்கள். நான் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டேனேயொழிய பல பேரின் இணைப்புகளால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. என்பதுதான் உண்மை.

இது போன்ற ஒரு நியைத்தை சுகாதார அமைச்சு யாழ் போதனா வைத்தியசாலையிலும் உருவாக்கி இருக்கிறது.  அதைவிட கிளிநொச்சியில் ஆரம்பித்திருக்கிறது. தெல்லிப்பழை மற்றும்  சங்கானை ஆகிய இடங்களில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை களையும் மேற்கொண்டிருக்கிறது.  அத்தகைய மையங்களுக்கு “நட்பு நிலையம்” என்று  பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அந்தந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்களும், பொது மக்களும் தமது பிரச்சினைகளை அந்தந்த மையங்களில் பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு  அதற்கான நீதியையும் பெற்றுக் கொள் முடியும்.

இது போன்ற மையங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து , கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றுகின்ற பெண்கள் எதிர்கொள்ளும் பால் நிலை தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு மையம் ஒரு வர்த்தக வைலயத்தில் உருவாக்கப்பட்டது இதுவே முதல் தடவை என்கிறார் வைத்திய கலாநிதி குருபரன்.

“திட்டம் போட்டுத் திருடிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிது, அதைச் சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கிது, மனிதனாப் பார்த்துத் திருந்தாவிட்டால்..” என்ற சினமாப் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுவோம். நாமாகத் திருந்த வேண்டும். எமது சுய தேவைகளுக்காகவும், சுய நலன்களுக்காகவும் பொது நிறுவனங்களை மாசு படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணினாலே போதும். நிறுவனம் நிமிர்ந்து விடும்.  எண்ணிப்பார்த்தால், ஏறத்தாழ 7500 மாணவர்கள் தமது எதிர்காலக் கனவுகளோடு யாழ். பல்கலைக் கழகத்துக்கு வருகிறார்கள். இதில் எல்லோரும் வசதி படைத்த சூழலிலிருந்து வருபவர்கள் அல்லர். நாளும் பொழுதும் தமது வாழ்வாதாரத்துக்கே போராடுகின்ற குடும்பங்களில் இருந்து வந்து கல்வி கற்கும் மாணவர்கள் பலரைச் சந்தித்தேன். இங்கிருந்துதான் தமது  வாழ்க்கை ஒளி மயமாக வேண்டுமென்ற எண்ணக் கருவோடு பயணிக்கின்ற அவர்களைப் போன்றவர்களை எண்ணிக் கொள்வோம். விகாரம் என்ற விடயம் எல்லோருக்குள்ளும் உண்டு. அதை அறிவால் கட்டிப்போடுவதுதான்   மானுடப் பண்பு. அறிவையும்  மீறி அது வெளிப்பாடுமானால்……!  அவர்கள் மனிதர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்?

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More