மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற பார ஊர்தி சிறுமி ஒருவரை மோதியதன் காரணமாக படுகாயமடைந்த நிலையில் மண்டபத்தடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது, பிரதேச மக்களினால் பார ஊர்தி சேதமாக்கப்பட்டுள்ளது.
காஞ்சிரங்குடா பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்ற 12 வயது சிறுமியையே மண் ஏற்றிச் சென்ற பார ஊர்தி மோதியுள்ளது. விபத்தினை தொடர்ந்து பிரதேச மக்களினால் விபத்தினை ஏற்படுத்திய பார ஊர்தி தாக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, காவற்துறையினருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியநிலையில் மேலதிக காவற்துறை வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் கலகமடக்கும் காவற்துறையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொக்கட்டிச்சோலை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தினை ஏற்படுத்திய வாகனத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.