இடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்து தெளிவடைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய கல்முனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் உள்ளடங்கிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதற்கான பொறுப்பை மக்கள் தமது கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இடைக்கால அறிக்கையில் சமஸ்டி என்ற சொல் அதாவது பெடரல் என்ற கட்டமைப்பு இலங்கைக்கு பொறுத்தமற்றது என குறிப்பிடப்படவில்லை எனவும் ஆனால் ‘யுனிட்டரி’ என்பது இலங்கைக்கு பாதகமானது என அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
‘ஏக்கியராஜிய’ என்ற பதம் நாடு ஒன்றாக இருப்பதைதான் குறிப்பதாக தெரிவித்த சுமந்திரன், அதற்கு இணையான தமிழ் சொல்லாக ஒருமித்த நாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதனை நன்றாக புரிந்துக்கொள்ளாமல் சிலர் தேவையற்றவிதத்தில் கூச்சலிடுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒன்றையாட்சி என்ற சொல் ஆட்சி அதிகாரங்களை மையப்படுத்துவதாகவும், மாறாக ‘ஏக்கியராஜிய’ என்ற சொல் முழு நாட்டையும் அதாவது ஒன்றாக இருக்கும் நாட்டை குறித்து நிற்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.