முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு காவற்துறையினர் இன்று (26.11.17) ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு-சுகந்திபுரம், நிரோஸன் விளையாட்டு மைதானத்தின் பல பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறை விசேடப் படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினால் இவ்வாறு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு-நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவுக்கமைய குறித்த விளையாட்டு மைதானத்தின் பல இடங்கள் அகலப்பட்ட போதிலும், அங்கு எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லையென காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதி யுத்தக்காலத்தின் போது தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆயுதங்கள் மற்றும் நகைகளை முல்லைத்தீவின் பல இடங்களிலும் புதைத்துச் சென்றுள்ளதாகவும்,இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.