தொடர் மழையால் முடங்கியது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் – நால்வர் உயிரிழப்பு
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை மற்றும் புயல் காற்றினால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தமை காரணமாக போக்குவரத்தும் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடற் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை மீனவக் குடியிருப்பு மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இடலாக்குடி என்ற இடத்தில் தொலைபேசிக் கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது.
ஓகி எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் காற்று வீசுகின்றமை காரணமாகவே கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுள்ளன.
இதேவேளை இந்த அனர்த்தத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.