குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தின் கால்பந்தாட்ட பயிற்றுவிப்புத் துறையில் இனபேதம் பாராட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பின மற்றும் சிறுபான்மையின பின்னணியுடைய கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்க நேரிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. த ஸ்போட்ஸ் பீப்பிள்ஸ் திங் ராங் ( The Sports People’s Think Tank )என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
482 சிரேஸ்ட கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிகளில் கறுப்பின மற்றும் சிறுபான்மையின பின்னணியுடைய 22 பயிற்றுவிப்பாளர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் இங்கிலாந்து கால்பந்தாட்டத்துறை ரூனி கொள்கையை பின்பற்ற வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமொன்றின் முன்னாள் உரிமையாளரான டேன் ரூனி, சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் போது குறைந்தபட்சம் ஒரு சிறுபான்மையின பயிற்றுவிப்பாளரேனும் அழைக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தார். இந்தக் கொள்கையை இங்கிலாந்தும் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.