யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்க்கட்டு சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு வருவதாக அந்தக் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில் ,
நாயன்மார்க்கட்டு குளத்தடிப் பிள்ளையாருக்கு அண்மையில் சமுர்த்தி வங்கி இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் பணிபுரிபவர்கள் அவர்களின் பாவனையின் பின்னான கழிவுப்பொருள்கள், வேற்றுத் தகர பேணிகள் , பெயிண்ட் பேணிகள் , என்பவற்றை வங்கி அமைவிடத்துக்கு அருகே வீசிவிட்டுச் செல்கின்றனர் .
அதேவேளை வேறு சிலரும் அந்த பகுதியில் குப்பைகளை வீசி செல்கின்றனர் இதனால் தற்போதுள்ள மழை காரணமாக மழை நீர் தேங்கி டெங்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது .
வீடுகள் தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்கள், டெங்கு பரவும் சூழலை வைத்திருந்தால் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்று அரச நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தொடர்பில் எமது பகுதியில் ஏற்பட்டு உள்ள சுகாதார சீரின்மை தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
செய்தி மற்றும் படங்கள் – ஐ.சிவசாந்தன்