குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
யாழ். நகரில் பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளால் அதிக கட்டணம் அறவிடப்படுவதுடன், கலாசார சீரழிவுகளும் இடம்பெறுகின்றன என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்து யாழ்ப்பாண நகரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிச் சாரதிகளே இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த முறைப்பாட்டை வழங்கினர்.
சுமார் 30 முச்சக்கர வண்டிச் சாரதிகள் கூட்டாக இணைந்துவந்த இந்த முறைப்பாட்டை காவல் நிலையத்தில் வழங்கினர்.
அது தொடர்பில் சாரதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
‘யாழ்ப்பாண மாநகர சபையில் பதிவு செய்து சுமார் 900 முச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாண நகரின் மத்தியிலுள்ள தரிப்பிடங்களிலிருந்து சேவையில் ஈடுபடுகின்றோம். பதிவு செய்யப்பட்ட அனைவரும் நியாயமான – எமது சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் சேவையில் ஈடுபட்டு வருகின்றோம்.
எனினும் யாழ்ப்பாண மாநகர சபையிலோ அல்லது முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்திலோ பதிவு செய்யாமல் 20 பேர்வரையில் யாழ்ப்பாண நகரிலுள்ள தரிப்பிடங்களிலிருந்து சேவையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அதிகரித்த கட்டணத்தை வாடகைக்கு அமர்த்தியோரிடம் அறவிடுகின்றனர்.
அத்துடன், பேருந்துகளில் வரும் பெண்களை ஏற்றி ஆள்கள் நடமாட்டமற்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களால் பாதிக்கப்பட்ட சிலர் எமது சங்கத்தின் மீது பழிபோடுகின்றனர்.
இவ்வாறு அடாத்தாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் தவறுகளை நாம் தட்டிக்கேட்டால் அவர்கள் மிரட்டுகிறார்கள். அவர்கள் தாம் முன்னாள் அமைச்சரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் தம்முடன் முரண்பட்டால் பின்விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி வரும் எனவும் எம்மை மிரட்டுகின்றனர்.
அவர்களின் அடாத்துகள் தொடர்பில் பல முறை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் வழங்கியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையினரும் அவர்களுக்கு உடந்தையாகச் செயற்படுகின்றனரோ என சந்தேகிக்கவேண்டி உள்ளது’ என மேலும் தெரிவித்தார்.