சிம்புவுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது என நடிகர் தனுஸ் தெரிவித்துள்ளார். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சிம்பு இசையமைத்துள்ள இந்த படத்தில் பிக் பொஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஒரு பாடல் பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் பல சுவாரஸ்யமான விடயங்களை தெரிவித்தார்.
“சந்தானம் சிம்பு ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். சந்தானம் மற்றும் அவரின் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய விழா நாயகன், கதாநாயகன் சிம்புவும், நானும் 2002ம் ஆண்டு கதாநாயகர்களாக ஒன்றாக அறிமுகமானோம். அதற்கு முன்பாக அவர் 3 வயதில் இருந்தே நடித்து வருகிறார். அப்பொழுதில் இருந்தே எங்களை ஒப்பிட்டுப் பார்த்து வருகிறார்கள்.”
“எங்கள் இரண்டு பேருக்குமே வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது எளிது. வரலாம், ஜெயிக்கலாம் ஆனால் நிலைத்து நிற்பது தான் கஷ்டம். 15 வருஷமாச்சு சிம்பு இன்னும் நிலைத்திருக்கிறார். ஷூட்டிங் பிடிக்காமல் தான் துள்ளுவதோ இளமை ஷூட்டிங்கிற்கு சென்றேன். அப்போது அசோக் ராஜன் என்று ஒரு டான்ஸ் மாஸ்டர் ஆட சொல்லிக் கொடுப்பார். எனக்கு ஆடவே வராது. அப்போ சுத்தமா வராது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். அசோக்கும், ரஞ்சித்தும் சுக்குமலா, சுக்குமலான்னு பேசினார்கள். என்ன என்று கேட்டதற்கு அந்த பாட்டை பாருங்க அவர் மாதிரி ஆடணும் என்றார்கள். அந்த பாடலை பார்த்துவிட்டு அசோக் மாஸ்டருக்கு போன் செய்து, அவர் என்ன அப்படி ஆடுறாரு, என்னிடம் அப்படி எதிர்பார்க்காதீங்க. அவர் மாதிரி என்னால் ஆட முடியாது என்றேன். முடியாது அப்ப மட்டும் இல்லை இப்பவும் என்னால் சிம்பு மாதிரி டான்ஸ் ஆட முடியாது. இதை இதுவரை நான் சிம்புவிடம் கூறியது இல்லை. நானும், சிம்புவும் நண்பர்கள். நாங்கள் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள். சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன். வருடத்திற்கு குறைந்தது இரண்டு படமாவது கொடுக்க வேண்டும். சிம்பு இசையமைத்தால் நான் பாடுவேன். இந்த படத்திற்கே ஏன் என்னை கூப்பிடவில்லை என்று நினைத்தேன்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.