குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட அழைத்து சென்றதற்கு தமிழரசு கட்சிக்கும் பெரும் பங்குண்டு என என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஆயுத போராட்டம் என்பது கேவலமான ஒன்றல்ல தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களை கொழும்பில் இருந்து வந்தவர் கொச்சைப்படுத்த முடியாது. ஆயுத போராட்டத்திற்கு இளைஞர்களை அழைத்து சென்றதில் பெரும் பங்கு தமிழரசு கட்சிக்கும் உண்டு இடையில் அரசியலுக்கு வந்தவர்களுக்கு அது பற்றி தெரியவில்லை. தமிழர்களின் உரிமை பிரச்சனைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றவர்கள் ஆயுதமேந்தி போராடி மரணித்தவர்களும் , ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுமே எனவே சுமந்திரன் தன்னால் இந்த தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்று தர முடிந்தால் பெற்றுக்கொடுக்கட்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை. போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்க வேண்டும். என மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. – சுரேஷ்:-
நல்லாட்சியிலும் கடந்த காலம் போல தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டு உள்ளார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்கள்.
ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்திய போது அதற்கு உடந்தையாக பொலிசாரும் செயற்பட்டு உள்ளார்கள். இவற்றை பார்க்கும் போது நாம் இன்னும் ஜனநாயக சூழலில் வாழ வில்லை என்பதை காட்டுகின்றது. நல்லாட்சியிலும் கடந்த காலம் போல தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதற்கு ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கும் சூழலை உருவாக்க வேண்டும். என தெரிவித்தார்.