குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்காக, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் டொனால்ட் ட்ராம்பின் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வருடாந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டிய ட்ராம்ப் தரப்பினை எதிர்க்கட்சியினர் மரியாதையுடன் நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ட்ராம்பின் நன்மதிப்பிற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் பல்வேறு புதுக் கதைகளை உருவாக்கி பிரச்சாரம் செய்து வருதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தேர்தல் பிரச்சார குழுவிற்கும் ரஸ்ய அதிகாரிகளுக்கும் இடையில் காணப்பட்ட உறவு சாதாரணமானது எனவும், அதில் எவ்வித சர்ச்சைகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ட்ராம்பின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தேர்தல் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தி வருவதாகவும் இதன் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.