ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து அங்கு சென்ற ராணுவத்தினர் ; கட்டிடத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகளை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதனையடுத்து, தீவிரவாதிகளை நோக்கி ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இன்னும் சில தீவிரவாதிகள் கட்டிடத்தில் பதுங்கியுள்ளதால், இன்னும் துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.