குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனித உரிமை விவகாரங்களில் இலங்கை மந்த கதியிலான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் மந்த கதியிலான போக்கே பின்பற்றப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது.
2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையும் இணை அனுசரணை வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.உண்மையைக் கண்டறிதல் மற்றும பலவந்த கடத்தல்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்றன தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் மெதுவான வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.