டெல்லி ஜகான்கிரிபுரியில் 20 வயது பெண்ணை பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திய சிறுவர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து காவற்துறையின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியத் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் இடம்பெிடித்துள்ள டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் கடந்த வாரமே இளம் பெண் ஒருவர் மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் இடம்பெற்று சில நாட்களிலேயே மற்றுமொரு பாலியல் பலாத்காரம் இடம்பெற்றுள்ளது.
டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வழியாக 20 வயது பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு நடந்து சென்ற வேளை, அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்ற 5 பேர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சத்தம்போட்டோலோ அல்லது நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினாலோ காவற்துறைக்கு போனாலோ கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அந்த பெண் அமைதிகாத்த நிலையில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உள்ளார்.
பின்னர் மறுநாள் வியாழக்கிழமை மதியம் தனது உறவினர் ஒருவரிடம் இடம்பெற்ற சம்பவம் குறி்த்து கூறியதனை அடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை கூட்டு பலாத்காரம் என வழக்குப்பதிவு செய்துள்ள காவற்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்துள்ள காவற்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரும் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்தியவர்கள் என்பதும், அவர்கள் நகராட்சி குப்பை கிடங்கில் பகுதிநேர வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் 18 வயதை கடந்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த காவற்துறையினர், 18 வயதை கடந்தவர்களாக இருந்தால், இன்று நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது.