இலங்கை பிரதான செய்திகள்

விக்கி அரசியல்வாதியாக தோற்றுவிட்டாரா? இல்லை என்கிறார் ஐங்கரன்….


வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்து வருகின்றனர் என்றுதமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கடுமையாக தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறந்தநீதியரசராக இருந்த போதும் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்துக்குப பதிலளிக்கும் விதமாக, பொ.ஐங்கரநேசன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தஅறிக்கையில், வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோல்வியடைந்துவிட்டார் எனவும், மத்திய அரசுவழங்கும் நிதியையே சரியாகப் பயன்படுத்தத் தெரியாத முதலமைச்சர் மலேசியா வழங்கும் நிதியை என்னசெய்வார் என்று புரியவில்லையெனவும் கேலியும் கிண்டலும் தொனிக்கச் சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமானடிலான் பெரோ பேசியிருக்கின்றார். அவர் மட்டுமல்ல, சிங்களத் தரப்பு அரசியல்வாதிகள் பலரும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களையும், வடக்கு மாகாணசபையையும் விமர்சிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே, மக்கள் மனங்களில் இருந்து அவரைக் கீழிறக்கும் உள்நோக்கில் இவ்வாறு தவறாக விமர்சித்துவருகின்றனர்.

விக்னேஸ்வரன் அவர்கள் நீண்டகாலமாகத் தென்னிலங்கையில் வாழ்ந்தவர் என்பதாலும், சிங்களத்தரப்புடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தமையாலும் அவரைத் தமது விருப்புகளுக்கு ஏற்பக்கையாளலாம் என்பதே சிங்களத் தலைமைகளினதும் அவரைமுதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கியவர்களினதும் எண்ணவோட்டமாக இருந்தது. ஆனால், இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக முதலமைச்சர் அவர்களின் செயற்பாடுகள் அமைந்தன. தமிழ் மக்களின் அரசியல் வேணவாவையும் போரில் அவர்கள்பட்ட ஆற்றொணாத் துயரங்களையும் நேரில் கண்டுணர்ந்த முதலமைச்சர் அவர்கள், அவற்றுக்கான நிரந்தரத்தீர்வு வேண்டி உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் குரல் எழுப்ப ஆரம்பித்தார்.

தங்களின் குரலாவே முதலமைச்சர் இருப்பதை உணர்ந்தமக்களிடையே அவர் மீதான பற்றும் செல்வாக்கும் உயர்ந்தது. முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்டுவருகின்ற செல்வாக்கு, எங்கே மீண்டும் தமிழ்த்தேசியம் பலம் பெற்றுவிடுமோ என்ற அச்சத்தைப் பேரினவாதச் சிங்கள அரசியல் தலைமைகளிடையேயும், எங்கேதங்களுடைய இருப்பு பறிபோய்விடுமோ என்றஅச்சத்தைச் சில தமிழ் அரசியல்வாதிகளிடையேயும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அவர்களின் மக்கள் பேராதரவுப் பலத்துக்கு அஞ்சுகின்ற இவர்கள் கூட்டிணைந்து முதலமைச்சர் அவர்களைப் பதவிகவிழ்க்கும் திரைமறைவுச் சதியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மீதான உண்மைக்குப் புறம்பான ஊழற் குற்றச்சாட்டுகளும் அவர்களது பதவிவிலகல்களும், அதைத் தொடர்ந்து ஆளுநர் அவர்களிடம் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கையளிப்பும் இச்சதியின் சிலகட்டங்களே.

முதலமைச்சர் அவர்களைப் பதவிகவிழ்க்க இயலாதநிலையில், இந்தத் தரப்பினரே தற்போது முதலமைச்சர் அரசியலில் தோற்றுவிட்டதாகப் பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிகாரங்கள் எதுவும் இல்லாத, சுயமாகச் செயற்படமுடியாத மாகாணசபை முறைமையில் உள்ள குறைபாடுகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளாகச் சித்திரித்துக்காட்டி மக்கள் மனங்களிலிருந்து அவரை கவிழ்க்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இத்தகையபரப்புரைகளின் பின்னால் உள்ள தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியலைத் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • தமிழர்கள் முழு உரிமைகளுடன் வாழ விரும்புகிறார்கள். இதைப் பூர்த்தி செய்ய விக்னேஸ்வரன் முழு உரிமைகளையும் கோருகின்றார். இது இனஅழிப்பைத் தொடரும் அரசாங்கத்திற்குத் தடையாக இருக்கின்றது. இதனால் அரசாங்கம் சார்பாக பணியாற்றும் சுமந்திரன் மற்றும் கொடுப்பதை ஏற்கத் தயாராக இருக்கும் விலை போன சம்பந்தன், ரணிலின் தூண்டுதலில் விக்னேஸ்வரனை அகற்ற முயல்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

Share via
Copy link