கடந்த 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த நக்சலைட் அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தனது மனைவியுடன் தெலங்கானா காவல்துறையில் சரண் அடைந்துள்ளார் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜம்பண்ணா என்பவர் சிறு வயதிலேயே நக்சலைட் அமைப்பில் சேர்ந்து பின்னர் அந்த அமைப்பின் மத்திய உறுப்பினரானார்.
இவர், ஒரு ராணுவ வீரருக்கு தேவையான அனைத்து பயிற்சி மற்றும் உத்திகளையும் அறிந்திருந்த நிலையில் இவர் மீது தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை உயிருடன் பிடித்து கொடுத்தாலோ அல்லது இவரைப் பற்றி தகவல் தெரிவித்தாலோ 24 லட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். ஜம்பண்ணாவின் மனைவியும் கடந்த 2003-ம் ஆண்டு நக்சலைட் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தநிலையில் மனைவிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஜம்பண்ணா, தனது மனைவி மற்றும் தன்னுடன் பணியாற்றும் மற்றொருவருடன் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்துள்ளனர்.