பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் நேற்றையதினம் சந்தித்துப் பேசியிருந்தனர்.
குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் சதி திட்டங்கள் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்ததனை அடுத்து அவரது மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்திய தூதரகம் சார்பில் ஜாதவுக்கு சட்ட உதவி வழங்கவும் குடும்பத்தினர் அவரை சந்திக்கவும் பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்து வந்தநிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவரது மனைவி மற்றும் தாயாரை சந்தித்துப் பேச பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் நேற்றையதினம் சந்தித்திருந்தனர்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் சந்திப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து விவாதித்து இரு தரப்பிலும் தெளிவான புரிந்துணர்வு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியத் தரப்பு தாங்கள் ஒப்புக்கொண்டபடி நடந்துகொண்டது எனவும் பாகஸ்தான் புரிந்துணர்வுக்கு முரணாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்கள் குல்புஷன் ஜாதவின் குடும்பத்தினரை அணுகவும் துன்புறுத்தும் கேள்விகளை கேட்கவும் பல சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு சோதனை எனும் பெயரில் அக்குடும்பத்தின் மத உணர்வுகள் புறந்தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலி, வளையல், பொட்டு ஆகியவை அகற்றப்பட்டதுடன், அவர்கள் ஆடையும் மாறவேண்டியிருந்ததெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குல்புஷன் ஜாதவின் தாயார் அவருடன் தனது தாய் மொழியில் பேச அனுமதிக்கப்படவில்லை எனவும் ஒவ்வொரு முறையும் அவர் தாய் மொழியைப்பயன்படுத்தியபோது அவர் குறுக்கீடு செய்யப்பட்டதுடன் இறுதியில் அவரது தாய் மொழியில் பேசுவதில் இருந்தே தடுக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான துணைத் தூதுவருக்கு தகவல் அளிக்காமலே இந்தச் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பின்னரே அவர் அந்த சந்திப்பு நிகழ்ந்த இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார் எனவும் எனினும், ஒப்புக்கொள்ளப்பட்டபடி அல்லாமல், அவர் இருந்த பகுதியில் கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குல்புஷன் ஜாதவின் மனைவி அணிந்திருந்த காலணிகள், அவர் பல முறை வலியுறுத்திய பின்னரும், அந்த சந்திப்பு முடிந்த பிறகும் அவரிடம் திருப்பி வழங்கப்படவில்லை எனவும் அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குல்புஷன் உடனான சந்திப்புக்குப் பின்னாத் அவரது தாயாரும் மனைவியும் ; தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதும், கொடுமைக்கு ஆளாகியுள்ள சூழலில் அவர் பேசுவதும் புலப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது