ஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக டெகரான் நகர தலைமை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அங்கு பெண்கள் தலையை மூடியபடி தளர்வான, நீளமான ஆடை அணியவேண்டும். அத்துடன் அதிக அளவில் ஒப்பனை செய்து கொள்ளக்கூடாது என்பதுடன் நகப்பூச்சு என்பன போடவும் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.
இந்தநிலையில் இந்த ஆடை கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடக்க ஒடுக்கமாக உடை அணியாத பெண்களுக்கு மென்மையான முறையில் ஆலோசனை வழங்கப்படும் எனவும் , அவர்கள் மீது கைது நடவடிக்கையோ, வழக்கு தொடரும் நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டமாது எனவும் டெகரான் நகர தலைமை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை மையங்கள் மூலம் பெண்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.