Home இலங்கை அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன்

அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன்

by admin

அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் பங்குபற்றினார். அதில் அவர் ஒரு விடயத்தைச் சொன்னார். கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சில நாட்களில் அங்கு தான் போனதாகவும் அவர்களைக் கண்டு கதைத்தபின் அடுத்தடுத்த நாளே பிரதமரை சந்தித்ததாகவும், கதைத்ததாகவும் சொன்னார். பிரதமர் எல்லாவற்றையும் கேட்டபின் பொறுங்கள் சட்டமா அதிபர், நீதி அமைச்சர் போன்றோரோடு பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று சொன்னாராம். சித்தார்த்தன் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். கைதிகளைத் திரும்பக் காணும்போது அவர்களுக்கு ஏதாவது ஓர் உத்திரவாதத்தை நான் வழங்க வேண்டும். அதையாவது தாருங்கள் என்று. அதற்கும் ரணில் சொன்னாராம் பொறுங்கள் நான் மேற்சொன்ன நபர்களோடு கலந்தாலோசித்த பின் அதைத் தருகிறேன் என்று.

சித்தார்த்தன் இதைக் கூறி சரியாக ஐந்து நாட்களின் பின் கடந்த புதன்கிழமை அதே போன்ற ஒரு பதிலை அரசுத்தலைவர் மைத்திரி கூட்டமைப்பின் மேல் மட்டத்திற்கு வழங்கியிருக்கிறார். அதன்படி சித்தார்த்தனுக்கு ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட அதே ஆட்களோடு கலந்தாலோசித்த பின் ஒரு தீர்மானத்தை எடுக்கலாமென்று அவர் கூறியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இப்படித்தான். கலந்தாலோசிப்பதை பற்றிப் பேசுவது, சந்திப்பிற்கு நாள் குறிப்பதைப் பற்றிப் பேசுவது என்றெல்லாம் பேசிப் பேசியே கைதிகளுக்கு இன்று வரையிலும் விடுதலை கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த புதன்கிழமை நிகழ்ந்த சந்திப்பில் பிரதமர் ரணில் கலந்து கொள்ளவில்லை. அவருடைய இந்தியப் பயணத்தை முன்னிட்டு அவரால் பங்குபற்ற முடியவில்லையாம். ரணில் இல்லாத ஒரு சந்திப்பில் மைத்திரி எப்படி ஒரு தீர்வைத் தருவாரென்று சம்பந்தர் நம்பினார்? அதை நம்பி ஒரு கொழும்பு ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

கைதிகளின் விடயம் ஒரு தீர்வின்றித் தொடர்வதற்கு காரணம் என்ன? அரசாங்கத்தின் மீது போதிய அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதுதான். அவ்வழுத்தத்தை யார் பிரயோகித்திருந்திருக்க வேண்டும்? மக்களாணையைப் பெற்ற பிரதிநிதிகள் பிரயோகித்திருந்திருக்க வேண்டும். அல்லது கைதிகளுக்காகப் போராடும் மாணவர்களும் பொது அமைப்புக்களும் பிரயோகித்திருந்திருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் மீதும் அரசாங்கத்தைப் பாதுகாக்க விரும்பும் வெளித்தரப்புக்கள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்திருந்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க விரும்பும் எல்லாத் தரப்புக்களோடும் அரசாங்கத்தோடும் பேரம் பேசியிருந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவ்வாறான பேரம் பேசும் அரசியல் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்த்தரப்பு நெருக்கினால் அரசாங்கம் ஒரு விடயத்தைச் சொல்லும். கைதிகளை விடுதலை செய்தால் அது கடும் போக்கு இனவாதிகளைத் தூண்டுவதாக அமைந்து விடும். அவர்கள் மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்று. இதையேதான் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளும் கூறி வருகிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுத்தால் அது மகிந்தவிற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்று அவர்கள் தமிழ்த்தரப்பிற்கு புத்திமதி கூறுகிறார்கள்.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். மகிந்தவோ மைத்திரியோ இருவருமே அரசுடைய தரப்புக்கள். பெரிய இனம். வெற்றி பெற்ற தரப்பு. அரசுடைய தரப்பு என்பதால் உலகம் முழுவதிலும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளைக் கொண்ட ஒரு தரப்பு. அதே சமயம் தமிழர் தரப்போ அரசற்ற ஒரு சிறுபான்மை. தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பு. இத்தரப்பை நோக்கி அரசாங்கமும் வெளியுலகமும் என்ன கேட்கின்றன? வெற்றி பெற்ற தரப்பிலுள்ள கடும்போக்காளர்கள் பலமடையக்கூடாது என்பதற்காக தோற்கடிக்கப்பட்ட சிறிய தரப்பை விட்டுக்கொடுக்குமாறு கேட்கிறார்கள். அதாவது வென்ற தரப்பு தோல்வியுற்ற தரப்பை மேலும் விட்டுக்கொடுக்குமாறு கேட்கிறது. வென்ற தரப்பின் பிரதிநிதிகள் தமது தரப்பிலுள்ள கடும்போக்காளர்களைச் சாட்டி தோற்ற தரப்பிற்கு தரக்கூடியதை மேலும் குறைக்கவோ இல்லாமல் செய்யவோ பார்க்கிறார்கள். ஆனால் தோற்ற தரப்பின் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?

தமது தரப்பில் தமக்கு உள்ள நெருக்கடிகளை எடுத்துக்கூறி ‘மக்கள் எதிர்க்கிறார்கள், மாணவர்கள் எதிர்க்கிறார்கள் அடுத்த தேர்தல்களில் இது எம்மைத் தோற்கடித்து விடும்’ என்று சொல்லியாவது தமது கோரிக்கைகைளிலிருந்து பின்வாங்கக் கூடாது. தமது பேரத்தை தாழ்ந்து போக விடக்கூடாது. இதுதான் பேரம் பேசும் அரசியல். அவ்வாறு பேரம் பேசுவதற்கு தமிழ்த்தரப்பு தன்னை ஓர் பலப்பிரயோக மையமாகக் கருத வேண்டும், கட்டியெழுப்ப வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தேர்தல் மூலம் பெற்ற மக்கள் அதிகாரத்தை வைத்து தமிழ்த்தரப்பானது தன்னை ஒரு வலு மையமாக கட்டியெழுப்பத் தவறிவிட்டது. அது தொடர்பான அரசியல் தரிசனம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படைத் தவறுதான் கைதிகளை விடுவிக்க முடியாமைக்குரிய ஒரு முக்கிய காரணமாகும்.

தன்னை ஒரு பலப்பிரயோக மையமாக வலு மையமாக கருதினால்தான் அப்பலத்தைப் பிரயோகித்துப் பேரம் பேசலாம். ஆனால் அப்படி எந்தப் பேரமும் இதுவரையில் செய்யப்படவில்லை. கடந்த புதன்கிழமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ‘மாணவர்களும், மக்களும் தமிழ்மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்’ என்ற ஒரு குறிப்பே உண்டு. அவர்கள் எங்களை நெருக்குகிறார்கள் என்று கூறப்படவில்லை. அப்படி நெருக்குவதால் எங்களால் இறங்கிப் போக முடியாது. எனவே வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் நாம் ஓர் இறுக்கமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கலாம். அப்படி ஒரு நெருக்குதலை அவர்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் கைதிகளும் கேட்கிறார்கள், பொது அமைப்புக்களும் கேட்கின்றன. எனவே இம்முறை வரவு – செலவுத்திட்;டத்தின் மீதான வாக்கெடுப்பை கூட்டமைப்பு ஒரு பேரம் பேசும் களமாக கையாள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிக் கையாள்வார்களோ தெரியவில்லை. மனோ கணேசன் கூறுவது போல அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டார்களா?

மக்கள் பிரதிநிதிகள் போதியளவு அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லையென்றால் அதை வெகுசன அமைப்புக்களே முன்னெடுக்க வேண்டும். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவ்வாறான வெகுசன அமைப்புக்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கவில்லை. வெகுசனக் கிளர்ச்சிகளின் மூலம் மக்கள் அதிகாரத்தை பெற்று மக்கள் பிரதிநிதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் உலக சமூகத்தின் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கத்தக்க வளர்ச்சிகள் எதையும் தமிழ் மக்கள் மத்தியில் காண முடியவில்லை.

கைதிகளின் விவகாரம் எனப்படுவது ஒன்றல்ல. அது அதைப்போன்ற பல விவகாரங்களின் ஒரு பகுதியே. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், காணிப்பிரச்சினை, மாவலி எல் வலயப்பிரச்சினை போன்ற ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாத ஓர் ஒட்டுமொத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியே கைதிகளின் போராட்டமாகும். எனவே தமிழ் வெகுசன அமைப்புக்களின் இயலாமையின் விளைவே மேற்படி தீர்வு காணப்படாத அனைத்துப் போராட்டங்களுமாகும்.

இதை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். 2009 மே மாதத்திற்குப் பின் தமிழ் எதிர்ப்பை கூட்டமைப்பு போதியளவு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று விமர்சிக்கும் எந்தவொரு தரப்பும் தன்னை ஒரு மாற்று எதிர்ப்பு மையமாக இன்னமும் முழுமையாகக் கட்டியெழுப்பியிருக்கவில்லை. இதைக் கோட்பாட்டு ரீதியாகச் சொன்னால் 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பானது அதற்கேயான தனித்துவமிக்க சாத்வீக வடிவத்தை கண்டுபிடித்திருக்கவில்லை. இதை சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும், செயற்பாட்டாளர்களும், கருத்துருவாக்கிகளுமே கண்டு பிடிக்க வேண்டும். இது தொடர்பில் ஆழமாகவும் விசுவாசமாக உரையாடப்பட வேண்டும். அப்படியொரு படைப்புத்திறன் மிக்க புதிய சாத்வீக போராட்ட வடிவத்தை கண்டுபிடிப்பதன் மூலம் முழு உலகிற்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும். முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள் அதைப்போலவே முழு உலகத்தையும் திகைக்கச் செய்யும் ஒரு சாத்வீகப் போராட்ட வடிவத்தையும் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியொரு வடிவம் கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்தில்தான் கடையடைப்பும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும், நடை பயணங்களும், கவனயீர்ப்புப் போராட்டங்களும் அரசாங்கத்தையோ அல்லது உலகத்தையோ அசைக்கத் தவறிவிட்டன.

இப்படி ஒரு வெற்றிடத்தில்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஐநூறு நாட்களுக்கும் மேலாக வயதான உறவினர்கள் தெருவோரங்களில் மழையில் நனைந்தும், வெய்யிலில் காய்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். காணிகளை மீட்பதற்கான போராட்டங்கள் நீர்த்துப்போய் ஓராண்டைக் கடந்து விட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் உடல் வலிக்க நடை பயணம் போனார்கள். ஆனால் கைதிகளுக்கு இன்று வரை விடிவில்லை. எனவே கூட்டமைப்பு பலப்பிரயோக அரசியலை முன்னெடுக்குமோ இல்லையோ வெகுசன அமைப்புக்கள் அதை முன்னெடுக்கும் வளர்ச்சிக்கு வரவேண்டும். வரும் 24ம் திகதிக்குப் பின் தமிழ் மக்கள் பேரவை அப்படியொரு வளர்ச்சிக்குப் போகுமா?

போக வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்கள் தமது கூட்டுரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளவே முடியாது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட கைதடிச் சந்திப்பில் சித்தார்த்தனும், அவரோடு வந்திருந்த கஜதீபனும் வெகுசன அமைப்புக்களை நோக்கி பின்வரும் தொனிப்பட ஒரு வேண்டுகோளை விடுத்தார்கள். ‘உங்களுடைய போராட்டத்தின் உக்கிரத்தைக் கண்டு தலைவர்கள் பயப்பட வேண்டும். நாங்கள் பயப்பட வேண்டும். அரசாங்கம் பயப்பட வேண்டும். எனவே நீங்கள் உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள். நாங்களும் உங்களோடு வருகிறோம்.’

அது உண்மைதான். கைதிகளுக்காக மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்குமாக பெருந்திரள் வெகுசனப் போராட்டங்கள் முன்னெடுக்குமாயிருந்தால் அவை ஒரு புதிய பலப்பிரயோக அரசியலுக்கு வழி திறக்கும். மக்கள் ஆவேசமாகப் போராடும் போது தலைவர்கள் பின்னே வரவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் பேரவையும் உட்பட எல்லாப் பொதுசன அமைப்புக்களும், இடதுசாரி அமைப்புக்களும் இது தொடர்பாக ஆழமாகவும், விசுவாசமாகவும் சிந்திக்க வேண்டும்.

ஆட்சி மாற்றத்தின் பின் கிடைத்த அதிகரித்த ஜனநாயக வெளியை ஈழத் தமிழர்கள் ஒரு பரிசோதனை வெளியாகப் போதியளவு பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். இந்த வெற்றுடத்துள் ஒன்று மாறி வேறொன்றாக புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்பி போராட்டக்காரர்களின் மையம் சிதறடிக்கப்படுகின்றது. இதற்கு ஆகப்பிந்திய உதாரணம் மகாவலி எல் வலயம். அது ஒரு புதிய பிரச்சினையே இல்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலான ஒரு பிரச்சினை. ஏனைய போராட்டங்கள் பிசுபிசுத்துப் போன ஒரு பின்னணிக்குள் அது ஒரு புதிய விவகாரமாக மேலெழுகிறது. நீரைக் குடுத்து நிலத்தைப் பறிக்கும் ஒரு திட்டமெனப்படுவது இன ஒடுக்கு முறையின் ஒரு பகுதிதான். இப்படியாகப் புதிது புதிதாக விவகாரங்கள் மேலெழும் பொழுது போராட்டக்காரரின் கவனம் அவ்வப்போது திசை திருப்பப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் அதாவது மாவலி எல் வலயமும் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரம் காணிப்பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகிய அனைத்தும் ஓர் ஒட்டுமொத்தப் பிரச்சினையின் வௌ;வேறு வெளிநீட்டங்கள்தான். எனவே இப்பிரச்சினைகளை ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தோடு அணுகும் ஒரு மக்கள் அமைப்பு வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வௌ;வேறு தொலை இயக்கிகளால் நடாத்தப்படும் போராட்டங்களைப் போலன்றி தமிழ் மக்களின் கூட்டுரிமைகளுக்கான ஒரு போராட்டம் அதன் ஒட்டுமொத்த வடிவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட ஒரு மக்கள் அமைப்பு வேண்டும். அது பரந்த தமிழ்ப் பொதுப்பரப்பில் தன்னை ஓர் வலு மையமாகக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழகம், டயஸ்பொறா, தாயகம் ஆகிய மூன்று களங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு வெகுசனப் போராட்ட அமைப்பே தமிழ் மக்களை மீட்பதற்குரிய புதிய வழிகளைத் திறக்கும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More