பத்து இலட்சம் தராவிட்டால் தலையை வெட்டுவோம் என இனந்தெரியாத நபர்களால் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத் தலைவிக்கு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது. கொச்சைத் தமிழில் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மிரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தை பெற்று விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்வதாகவும் அப் பணத்திலிருந்து பத்து இலட்சம் ரூபா தரவேண்டும் எனவும் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவிலில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் தாம் செயற்பட்டு வருவதாகவும் இதற்காக தாம் ஐ.நா வரை சென்று குரல் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த இநன்தெரியாத நபர், வெளிநாட்டிலிருந்து தனக்கு பண மூட்டைகள் வருவதாகவும் அவை விடுதலைப் புலிகளை உயிர்பிக்கும் முயற்சிக்காக தரப்படுபவை எனவும் தெரிவித்ததாக கூறிய செல்வராணி, தனது சொந்த நிதியிலேயே இவ்வாறு பயணம் செய்து குரல் கொடுத்து வருவதாகவும் தேவையேற்படின் அதனை நிரூபிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்