சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் இவ்வருடம் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தங்களது இராச்சியத்திற்குள் ‘ சட்டத்தின் அதிகாரத்தை ‘ ஊக்குவிக்கப்போவதாக கூறியிருந்தார். ‘ த அட்லாண்டிக் ‘ என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘ தீவிரவாதத்துக்கு வாய்ப்புக் கொடுக்காத முறையில் எம்மால் இயன்றவரை பேச்சுச் சுதந்திரத்தை ஊக்குவிக்க நாம் விரும்புகிறோம்.’ என்று அவர் தெரிவித்திருந்தார்.ஆனால், 6 மாதங்கள் கழித்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சவூதி துணைத்தூதரகத்திற்குள் வைத்து ஜமால் கஷொக்கி என்ற சவூதி பத்திரிகையாளர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டிருப்பது குறித்து அவரே கேள்விகளுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.எம்.பி.எஸ்.என்று நன்கு அறியப்பட்ட அவரின் கீழ் சவூதி அரேபியா எவ்வாறு செயற்படுகின்றது என்பதை இந்த முரண்பாடு வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது.
அரியாசனத்துக்கு பெருக்கமாக முன்னரங்கிற்கு நகர்ந்த பிறகு எம்.பி.எஸ். சலாஃபி இராச்சியத்தை 21 ஆம் நூற்றாண்டுக்குரிய முறையில் தலைமைதாங்கி வழிநடத்தக்கூடிய சமூக – பொருளாதார சீர்திருத்தவாதியாக தன்னைக்காட்டிக்கொள்வதில் முனைப்புக்காட்டினார்.எம்.பி.எஸ்ஸின் சீர்திருத்தங்களை சவூதி அரேபியாவின் அரபு வசந்தம் என்று அமெரிக்க பத்திரிகையாளரான தோமஸ் பிரீட்மான் வர்ணித்தார்.ஆனால், யதார்த்தநிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.எம்.பி.எஸ் ஒன்றும் முற்போக்கான இளவரசரல்ல.மாறாக, தனது கைகளில் பெருமளவு அதிகாரங்களைக் குவிக்கின்ற செயன்முறைகளின்போது சில சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கின்ற- அதிகாரவெறியுடன் தறிகெட்டு செயற்படுகின்ற ஒருவராகவே அவர் தோன்றுகிறார். இந்த பரந்த பின்புலத்திலேயே கஷொக்கியின் கொலையைப் பார்க்கவேண்டும்.
கஷொக்கி கொலைசெய்யப்பட்டிருக்கும் விதம் முடிக்குரிய இளவரசரின் ஆதரவாளர்களுக்கே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.விஷமிகளினால் திட்டம் தீட்டப்பட்டு இறுதியில் பிழையாக முடிந்துவிட்ட ஒரு நடவடிக்கையாகவே பத்திரிகையாளரின் கொலையை சவூதி அரசாங்கம் வாதிடுகிறது. ஆனால், இந்த பலவீனமான வாதத்தை எம்.பி.எஸ்ஸின் நெருக்கமான ஆதரவாளர்கள் கூட நம்புவதற்கு கஷ்டப்படுகிறார்கள்.எம்.பி.எஸ்ஸின் சர்வாதிகார உலகில், அவரைக் கடுமையாகக் கண்டித்து விமர்சனம் செய்கின்றவர் என்று பெயரெடுத்த – வாஷிங்டன் போஸ்டின் 59 வயதான பத்திரிகையாளர் ஒருவரை ஒழித்துக்கட்டுவதற்காக போக்கிரித்தனமான புலனாய்வு அதிகாரியொருவர் சவூதியுடன் பதற்றமான உறவைக்கொண்ட ஒரு நாடான துருக்கிக்கு தாக்குதல் குழுவொன்றை அனுப்பிவைப்பதென்பது கற்பனை செய்துபார்க்க முடியாததாகும்.இந்த சம்பவத்திற்கான பொறுப்பில் இருந்து எம்.பி.எஸ். சுலபமாக தப்பிவிடமுடியாது.சவூதி அரேபியா ஏன் வெளிநாடொன்றில் இத்தகைய கொடூரமானதும் தறிகெட்டதும் ஆபத்து நிறைந்ததுமான ஒரு நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு கேள்வியாகும்.மக்களின் உரிமைகள் விடயத்தில் சவூதியின் கவலைக்குரிய வகையிலான கடந்த கால நடத்தைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது தார்மீக வாதம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்தக் காரியத்தைச் செய்தவர்கள் இராஜதந்திர எதிர்விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லையா? அனர்த்தத்தனமான தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்திவிட்டு எந்தச் சிக்கலும் இல்லாமல் தப்பிச்செல்வதற்கு அவர்கள் பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலும்.
களையெடுப்பு
வைராக்கியமான முடியாட்சிவாதியான எம்.பி.எஸ். கலாசாரத்தின் மீது பழமைவாதிகள் கொண்டிருக்கும் பிடியை தளர்த்துவதாகவும் எண்ணெய் மீது குறைந்தளவுக்கே தங்கியிருக்கக்கூடியதாக பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதாகவும் மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.ஆனால், இது அரச மானிகைக்குள் நடக்கின்ற பெரிய அதிகாரப் போட்டியில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நோக்கிய அவரின் தந்திர மார்க்கமாகவே இருந்தது.
பெண்கள் வாகனம் செலுத்தவும் சினிமா திரையரங்குகளுக்குச் செல்லவும் எம்.பி.எஸ். அனுமதித்திருக்கக்கூடும். ஆனால், தனக்கு போட்டியாக வரக்கூடியவர்கள் என்று தான் கருதியவர்கள் ( அரச குடும்பத்திற்குள் இருப்பவர்கள்)சகலரையும் வேட்டையாடுவதில் அவர் ககுறியாக இருந்தார்.கடந்த வருடம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பின் சகல பிரிவுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் என்ற பெயரில் அவர் உண்யமயில் முன்னெடுத்தது ஒரு களையெடுப்பேயாகும்.இலக்குவைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆடம்பர ஹோட்டல்களில் வாரக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த அதேவேளை, எம்.பி.எஸ்ஸைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களும் மதத் தலைவர்களும் இனந்தெரியாத இடங்களில் சிறைவைக்கப்பட்டனர். அந்த நடவடிக்கைகளின்போது எம்.பி.எஸ்.முற்றுமுழுதான அதிகாரத்தின் சுவையை ருசித்தார்.அரசாங்க நிறுவனங்கள் அவருக்கு வளைந்துகொடுத்தன.அவரது தந்தையாரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் கூட எழதயும் தட்டிக்கேட்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தார்.
உள்நாட்டில் அச்சத்தைப் பயன்படுத்துகின்றதும் கர்வத்தனமான வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடிக்கின்றதுமான பலம்பொருந்திய முடியாட்சியே எம்.பி.எஸ்ஸின் நோக்காகும்.ஆனால், பெரும்பாலான அவரின் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்கள் எதிர்விளைவுகளைத் தருபவையாகவே இருந்தன. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவர் யேமன் மீது போர் தொடுக்கப்படுவதற்கு முக்கியமான காரணகர்த்தராக இருந்தார்.அந்தப் போர் பாரதூரமான மனித அவலத்தைக் கொண்டுவந்தது.இருந்தும் கூட சவூதி அரேபியா அதன் நடவடிக்கைகளுக்காக ஒரு போதுமே பொறுப்புக்கூற வைக்கப்பட்டதில்லை. மறுபுறத்திலே அமெரிக்காவின் உறுதியான ஆதரவு சவூதிக்கு இருக்கிறது.
அதே தறிகெட்டபோக்கை கடந்த வருடம் அயல்நாடான கட்டாருக்கு எதிராக சவூதி அரேபியா தடைகளைக் கொண்டுவந்ததிலும் காணக்கூடியதாக இருந்தது.பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை கட்டார் ஆதரிக்கின்றது என்று முதலில் சவூதி கூறியது.தடைகளை நீக்கவேண்டுமானால் கட்டார் நிறைவேற்றவேண்டியவை என்று பெருவாரியான நிபந்தனைகளையும் சவூதி விதித்தது. அல் ஜசீரா தொலைக்காட்சி நிரலயத்தை மூடவேண்டும் என்பதும் ஈரானுடனான உறவுகளைத் துண்டிக்கவேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் அடங்கும். கட்டார் அவற்றை நிராகரித்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமானவையாகவே இருந்துவருகின்றன.
கடந்த வருடம் நவம்பரில் சவூதி அரசாங்கம் லெபனான் பிரதமர் சாட் ஹரிரியை றியாத்தில் தடுத்துவைத்தது. பிரதமர் பதவியை துறப்பதாக அங்கிருந்து அவர் அறிவித்தார்.சில வாரங்கள் கழித்து அவர் லெபனானுக்குத் திரும்பி பிரதமராகவே பதவியில் தொடர்ந்தார்.இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் கனடாவுக்கான தனது தூதுவரை சவூதி அரேபியா திருப்பியழைத்ததுடன் புதிய வாணிபத்தையும் முததலீட்டையும் முடக்கிவைத்தது. பெண் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கனடா விசனம் தெரிவித்ததற்காகவே இவ்வாறு சவூதி நடந்துகொண்டது.
தவறான கணிப்பீடு
இந்த சம்பவங்கள் சகலதிலுமே மூன்று பொதுவான அம்சங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. முதலாவது தங்களது நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்து சவூதியர்கள் குழப்பமடைந்ததே இல்லை.இரண்டாவது சீர்திருத்தங்களை முன்னெடுக்கப்போவதாக எம்.பி.எஸ். உறுதிமொழிகளை வழங்கியபோதிலும் தன் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அவர் தாங்கிக்கொள்ளமுடியாதவராகவே காணப்படுகிறார்.விமர்சனங்களுக்கான அவரின் பிரதிபலிப்பு அளவுக்கு மீறி ஆக்ரோஷமானதாகவே இருக்கிறது.மூன்றாவது ட்ரம்ப் நிருவாகத்திடமிருந்து கிடைக்கின்ற கெட்டியான ஆதரவு காரணமாக தண்டனைகளுக்கு பயப்படாத உணர்வை எம்.பி.எஸ்.கொணடிருக்கிறார்.க ஷொக்கியின் கொலையினால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி சவூதி அரசாங்கம் தப்புக்கணக்கைப் போட்டுவிட்டது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவர்கள் தவறான இடத்தைத் தெரிவுசெய்ததுடன் துருக்கிய புலனாய்வு சேவையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்.
இராச்சியத்துடன் கொண்டிருக்கும் கேந்திரமுக்கியத்துவ உறவை அமெரிக்கா தாரைவார்ப்பது சாத்தியமில்லை என்பதால் சவூதி அரசாங்கம் இன்னமும் கூட தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கககூடும்.உலகளாவிய அதிர்ச்சியும் சீற்றமும் தணியட்டும் என்று சகல தரப்பினரும் காத்திருக்கவும் கூடும்.ஆனால் இத்தகைய நிகழ்வுப்போக்குகளின் விளைவாக ஏறபடக்கூடிய பரந்தளவிலான கோலத்தை எவரும் ஊகித்துப்பார்க்காமல் இருக்க இயலாது.அதாவது முடிக்குரிய இளவரசரின் ‘ வீரசாகசங்கள் ‘ எந்தளவுக்கு சவூதி அரேபியாவை புவிசார் அரசியல் பின்புலத்தில் பாதிக்கப்போகிறது?
யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சவூதியர்கள் இன்னமும் தோற்கடிக்கவில்லை.சவூதியின் நிபந்தனைகளை கட்டார் நிராகரித்தபோது றியாத்திடம் அதைக்கையாள அடுத்த திட்டம் ஒன்று இருக்கவில்லை.அதேவேளை வளைகுடாவின் சுன்னி முஸ்லிம் முடியாட்சிகள் ஈரானுக்கு எதிராக ஐக்கியப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நேரத்தில், கட்டாருக்கு எதிரான சவூதியின் குரோதப்போக்கு மேற்காசியாவிற்குள் பதிய பிளவுகளை மாத்திரமே உருவாக்கியது.
சிரியாவின் போரில் சவூதிக்கு பின்னடைவே ஏற்பட்டது.அங்கு சவூதி செய்த இராணுவ மற்றும் நிதி முதலீடுகள் விழலுக்கிறைத்ததாகின.இப்போது கஷொக்கியின் கொலை சுன்னி உலகின் தலைமைத்துவ நாடாக விளங்க விரும்பிய சவூதிக்கு ஒரு வெளியுறவு விவகார அனர்த்தமாகப் போய்விட்டது.எம்.பி.எஸ்ஸின் கீழ் சவூதி அரேபியாவின் கேந்திர முக்கியத்துவ வல்லமை படிப்படியாக அருகிக்கொண்டுவந்திருக்கிறது.விரைவில் அந்த இராச்சியம் அதன் விளைவுகளைக் கையாளவேண்டியிருக்கும்.
– ஸ்ரான்லி ஜொனி – வீரகேசரி…
(நன்றி; த இந்து ஆங்கிலம்)