எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாதவிடத்து, தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராகவுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பேரவைச் செயலகத்தில இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள்ளார்.
மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென முன்மொழியப்பட்ட போது அவரும் கைவிட்டதால், தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது ஏமாற்றத்திற்குரியதெனவும் தெரிவித்துள்ளார்.
மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமெனவும், தமிழரசுக் கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தைக் கொண்டவராக இருக்க வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தால், ஏற்கெனவே, மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பதாகத் தெரிவித்த அவர், சில சமயங்களில், மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் தான் என்பதே தனது நிலைப்பாடெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.