புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தான் விரும்பவில்லை எனவும் அதனால் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டு தமது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னணியின் பிரதி தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரத்துடனும் மகிந்த தொலைபேசியில் பேசி ஆதரவு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் ஆதரவுக் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அதியுயர்பீடம் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றதாகவும் இதன்போது குறித்தவிடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது