மத அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 47 வயதான ஆசியா பீபி தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தமையினால் அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து ஆசியா பீபி, தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றில் மேல்மூறையீடு செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்தும் ஆசியாவைப் பொது வெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் எனவும் பாகிஸ்தானின், ராவல்பிண்டி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையிலேயே வன்முறையாளர்களினால் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் தனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அசியாவுக்கு வேறு வழி இல்லை எனத் தெரிவித்துள்ள ஆசியாவின் சகோதரர் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அசியாவுக்கு அடைக்கலம் தருவதாக தெரிவித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். அசியாவின் கணவர் அவர்களது குழந்தைகளுடன் பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் வந்திருக்கிறார் எனவும் அசியாவின் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்