தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது அரசியல் சதி எனவும் இதனை தடுக்காவிட்டால் எதிர்காலம் பயங்கரமாக அமையும் எனவும்; தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உருவாகியுள்ள அரசியல் மாற்றத்தை எதிர்த்தும், ஜனநாயகத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்தி இன்று கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நல்லிணக்க செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமரின் எண்ணக்கருவின் அடிப்படையில் காணிகள் மீளளிப்பு, காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தமை, இழப்பீட்டு அலுவலகம் அமைத்தமை, வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைத்தமை உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அனுபவிக்கும் சுதந்திரம் என சகல விடயங்களும் நல்லாட்சி அரசாங்கத்திலேயே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர் பிரதமர் ரணிலின் இடத்திற்கு இன்னொருவரை நியமிக்க தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பயத்துடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை எனவும்; கூறினார்.
இதேவேளை அதிகாரம் கைமாறிய விடயம் மிகவும் மோசமானது என்று கூறிய ஜெஹான் பெரேரா மக்களுக்கு தெரியாமல், இரவோடிரவாக, இரகசியாக அதிகாரம் கைமாற்றப்பட்டமை அரசியல் சதி என்றும் இரத்தமின்றி, வன்முறையின்றி இந்த சதி இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்கால தலைமைத்துவம் பயங்கரமானதாக இருக்கும் என்றும் இந்நிலைமையை இப்போதே நிறுத்தப்பட வேண்டும் எனவும்; அவர் தெரிவித்தார்.
அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெரியாது. அவை குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம் என்பன பாதிக்கப்படுவதாகவும் ஜெஹான் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.