தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் கோரியுள்ளார் என அறிந்து கொண்டோம். அவர் என்ன செய்ய போகிறார் என ஏன் இன்னும் மக்களுக்கு சொல்லவில்லை. ஊடகவியலாளர்களுக்கும் எதுவும் சொல்லி இருக்க மாட்டார் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. ஏனைய கட்சிகளை , மர்ரைவர்களை விமர்சிப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கலாம் எனவோ தனது அரசியலை முன்னெடுக்கலாம் எனவோ நினைப்பது தவறு.
தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்ய போகிறார். அஹிம்சை ரீதியாக போராட போகிறாரா ? அல்லது ஆயுத ரீதியாக போராட போகிறாரா ? அல்லது தொடர்ந்து ஏனையவர்களை விமர்சித்துக்கொண்டு தான் இருக்க போகின்றாரா ?
மக்கள் அவர்களுக்கும் வாக்களித்து உள்ளனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு தாம் என்ன செய்ய போகின்றோம் என்பது பற்றி எதனையும் கூறாமல் மற்றவர்களை தொடர்ந்து குறை கூறிக்கொண்டும் விமர்சித்தும் கொண்டு இருப்பது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேறுமாறு தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த எவரும் எம்மை கோரவில்லை. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னேடுக்கப்பட்ட எழுக தமிழுக்கு நாம் பூரண ஆதரவு அளித்திருந்தோம். எனவே பேரவை என்பது ஒரு கட்சியல்ல அது பல கட்சிகளின் கூட்டு என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
TNA ரணிலுக்கு ஆதரவு என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை…
தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில்.உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என எங்கும் குறிப்பிடவில்லை. தற்போதைய பிரதமர் நியமனம் ஆனது ஜனநாயக அரசியலமைப்புக்கு எதிரான நியமனம் அதனை நாம் எதிர்க்கின்றோம். எனவே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு நாம் ஆதரவு அளிப்போம். அது ரணிலுக்கான ஆதரவு அல்ல என தெரிவித்தார்.
ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு..
ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்.கந்தரோடையில் உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வவுனியாவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை ஒருமையில் விளித்து உரையாற்றி இருந்தார்.
எது எப்படி இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியை அவ்வாறு விளித்து இருக்க கூடாது. சரியோ பிழையோ அவர் நாட்டின் ஜனாதிபதி அரசியல் ரீதியாக அவருடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆனால் கீழ்த்தரனமான வார்த்தைகளால் பேசியதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.