பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
4 வருடங்களின் பின்னர் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி…
4 வருடங்களின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒரே மேடையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நவம்பர் மாதம் என்பது ஆச்சிரயமூட்டும் மாதமாகும். 2014ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் தான் மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவையிலிருந்து விலகியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருடம் நவம்பர் மாதம் தாமிருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பிரதமர் கதிரைக்காக, நாட்டுக்கும், தேசத்துக்கும் பொருத்தமான வெளிநாட்டு அரசியல் கோட்பாடுகளை நிராகரிக்கும் ஒருவரையே பிரதமாக தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது..
ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, 3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.