சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே முதல் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத் தரவுகளின்படி 31 லட்சத்து 80,014 வாக்காளர்கள் உள்ள நிலையில் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கும் ஏனைய பகுதிகளில் 8 மணிக்கும் ஆரம்பமாகியுள்ளன.
மேலும் தேர்தலையடுத்து பாதுகாப்புக்காக ஒரு லட்சம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் மற்றும் தூர்தர்ஷன் ஊடகவியலாளர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் நேற்றும் ஏழு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன
இந்தத் தேர்தலின் வாக்குகள் டிசம்பர் 11ஆம் திகதி எண்ணப்படவுள்ள நிலையில் 15 ஆண்டுக் கால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்து சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் உருவாகியுள்ளது.
இதேவேளை இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர் எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது