பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாண்ட யார்ட் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட் உள்ள புகழ்பெற்ற இந்த சுவாமிநாராயன் கோயில் பிரித்தானியாவின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் உள்ளது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றநிலையில், தீபாவளித் தினத்தன்று 50 ஆண்டு பழமைவாய்ந்த கிருஷ்ணர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலினையடுத்து ஸ்கொட்லாண்ட யார்ட் அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கமராவினைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையில் அந்தக் கிருஷ்ணர் சிலைகள் தங்கத்தால் உருவானவை அல்ல எனவும் பித்தளைச் சிலைகள் எனவும் கொள்ளையர்கள் தங்கச்சிலை என நினைத்துக் கொள்ளையடித்திருக்கலாம் எனவும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.