பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் சற்று முன்னர் குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7 ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபகஸவை பிரதமராக நியமித்தார். இச் சம்பவத்தின் காரணமாக இலங்கையின் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நிலவி வருகிறது. இவ்வாறான குழப்ப நிலை தொர்ந்த போது ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தான்தோன்றித்தனமானது எனவும், அரசியல் அமைப்பிற்கு எதிரானது எனவும் தெரிவித்து 15 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. பாராளுமன்றம் கலைத்தமை சரியானதே எக் கூறி 5 மனுக்கள் ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டும் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்றன.
குறித்த தீர்மானம் மிக்கதோர் வழக்கு விசாரணை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை நேரம் மாலை 5 மணி வரை குறித்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதே வேளை 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.
ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்று சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.