இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வுகளை பார்வையிட்ட அவர், தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கியமான பணிகளை ஆற்றுவதற்காகவே இவர்களை மக்கள் தெரிவு செய்தததாகவும் நினைவுபடுத்தியுள்ளார்.
இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்றத்திற்கும் உரிய வகையில் மதிப்பு கொடுக்கும் விதமாக செயற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் செயற்படுவதை அதன் உறுப்பினர்களே தடுத்தால், எந்தப் பாராளுமன்றமும் இயங்க முடியாது என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.