குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.
பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன..
பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடங்குவதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டிய போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வுப் பணிகள் மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இந்த பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.