269
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் பதிப்பகத்தாருடன் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா நேற்று சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றினர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர் வசந்தகுமார் கஜானன் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைத்தார்.
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பா.பாலகணேசன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தொடக்கவுரையையும் ஆற்றினர்.
நாவலர் விழாவையொட்டி யாழ். பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட நாவலர் விடயத்திறன் இறுதிப் போட்டிக்கான பரிசளிப்பும் நடைபெற்றது. போட்டியின் இணைப்பாளர் ஜீ.சஜீவன் பரிசளிப்பை நெறிப்படுத்துவார். இதில் முதல் இடத்தை யாழ். இந்துக் கல்லூரியும், இரண்டாம் இடத்தை உரும்பிராய் இந்துக் கல்லூரியும் மூன்றாம் இடத்தை வட்டு. இந்துக் கல்லூரியும் பெற்றுக்கொண்டன. வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான வெற்றிக் கேடயங்களை தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கிக் கௌரவித்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக யாழ். சக்சபோன் சகோதரர்களான ஆர்.வை. நவரூபன், ஆர்.வை. காண்டீபன் ஆகியோரின் நாதசங்கமம் என்ற தலைப்பில் அமைந்த சக்சபோன் கச்சேரி, சின்னமணியின் சீடர் கலாவித்தகர் ஆசிரியர் ஏ.எஸ். மதியழகனின் தலைமையில் கலைவாணர் வில்லிசைக் குழுவினர் வழங்கும் ‘ஆறுமுக’ நாவலர் என்ற பொருளில் அமைந்த வில்லிசை என்பன இடம்பெற்றன. தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தஸ்ரீ நன்றியுரை ஆற்றினார். யாழ். இந்துக் கல்லூரி மாணவன் சி.விசாகனன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love