மதிய உணவுத் திட்டம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்காத ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் தலா 1 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. அத்துடன் டெல்லி அரசுக்கு 2 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், உணவு தானியங்கள் உரிய முறையில் பாடசாலைகளுக்கு சென்று சேர்வதில்லை எனவும் தெரிவித்து அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்த விரிவான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்ததுடன் அந்த விவரங்களின் அடிப் படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் குறித்த 6 மாநிலங்கள் தவிர அனைத்து மாநிலங்களும் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தன.
இதனையடுத்து மதிய உணவுத் திட்டத்தை சில மாநிலங்கள் தீவிர மாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்த நீதிபதிகள் இவ்வாறு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அறிக்கையை அடுத்த 4 வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அபராதமாக பெறப் படும் தொகை சிறுவர் நலனுக் காக பயன்படுத்தப்படவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.