யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பலரின் மனங்களை வென்ற வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லை மாவட்ட வவைத்தியசாலை முன்னாள் பணிப்பாளரும், யாழ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின், வைத்திய நிபுணரே இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
யாழ் இணுவில் பகுதியினைச் சேர்ந்த வைத்தியர் அம்பலவாணர் ரகுபதி தனது வீட்டில் இருந்தபோது அதிகாலை 2.30 மணியளவில் நெஞ்சுவலியினை உணர்ந்துள்ளார். இதனையடுத்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பேற்படுத்தியதும் உடனடியாக நோயாளர் காவு வண்டி அவரது வீட்டுக் சென்று அவரை பொறுப்பெற்று யாழ் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போதே சுயநினைவை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சையளித்த போதும், அவரைக் காப்பாற்ற முடியவில்லையென வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.
குறித்த வைத்தியர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போது, நோயாளர்கள், வைத்தியசாலை பணியாளர்களின் பெருமதிப்பை அவர் பெற்றிருந்தார் என்பதுடன் நோயாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துபவர் என்று பலராலும் புகழ் அஞ்சலிகள் செலுத்தப்படுகின்றன.
குறிப்பாக இவர் பிறந்த இணுவில் கிராமம், பயின்ற கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம், யாழ் பல்கலைக்கழக சமூகம், வைத்திய சமூகம் என பல தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.