பிரதமர் பதவியைக் கொள்ளையடிக்க முயன்றதுபோல எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொள்ளையடிக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியை அரசியல் துரோகமாகவே கருதுவதாகவும் இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்ஸ இருந்தமை அனைவருக்கும் தெரியும் எனவும் தெரிவித்துள்ள அவர் மகிந்தவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மொட்டுக்கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக என அவரே கூறியுள்ளதாகவும் இரண்டு கட்சிகளின் உறுப்பினராக இருந்துகொண்டு மகிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவூடாக இந்த விடயத்தை ஆராய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் இந்த சூழ்ச்சி மற்றும் மொட்டுக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டமை ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் எனக் கூறுவதாயின் மகிந்த ராஜபக்ஸ, மக்கள் முன்னனிலையில் வந்து தமது செயற்பாடு தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவு ம் ஒரு நாடகத்தைத் தான் மேற்கொண்டதை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மகிந்த தரப்பினர் இனியாவது மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.