மலைய மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி நான்காவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை மலையக இளைஞர் மூவர் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நுவரெலியா- தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதோடு, அச்சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமைத்திருந்த கூடாரத்தை கோட்டை புகையிர நிலைய அதிகாரிகள் பலவந்தாக அகற்றியுள்ள போதிலும் அவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் தமது போராட்டத்தில் மலையக இளைஞர்கள் அனைவரையும் இணையுமாறும் இவ் இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.