ஏமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க தமது குழு ஒன்றை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டுப் போரால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ள ஏமனில் உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக உள்ள, ஹூடேடா ( Hodeidah) துறைமுக நகரில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள அரச படையினரும் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும்; கடந்த வாரம் ஒப்புக்கொண்டதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அங்கு யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்தது.
இதனையடுத்து அங்கு கண்காணிப்புக் குழுவை அனுப்பும் தீர்மானத்தை பிரித்தானியா தயாரித்த நிலையில் அதற்கு பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஹூடேடா நகரில் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கும் முகமாக நிலையான நடைமுறைகளை அமுல்படுத்தவும், அங்கு மீண்டும் ஐ.நா படைகளை அனுப்பவும், அந்நகரில் உள்ள மூன்று துறைமுகங்களைக் கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸிடம் இந்தத் தீர்மானம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
பாதுகாப்பு சபையில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஏமன் தொடர்பாக நிறைவேற்றப்படும் முதல் தீர்மானம் இதுவாகும்.இந்தநிலையில் யுத்த நிறுத்தம் மற்றும் உதவிப்பொருள் விநியோகம் ஆகியவற்றை ஐ.நாவின் குழு முதல் கட்டமாக 30 நாட்கள் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்தத் துறைமுக நகரில் அமைதி திரும்பினால், பல லட்சம் ஏமன் மக்களின் பட்டினி தீர்வதுடன், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர வழி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது