நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் நாள்-அசரவைக்கும் உணவு,அடுக்கடுக்காக ஆபரணம், அலங்காரமான உடை, ஆடம்பரமான நாள்-சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில்- அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதின் ஒன்றாக கடந்து போகும் பல்வேறு கதா பாத்திரங்கள் உண்டு.
அவர்கள் எல்லோருமே எமது வாழ்வில் தாக்கத்தை செலுத்துவதில்லை.எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் உண்டு.
வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று எண்ணாதீர்கள். அதில் சிலர் ஒரு காலத்தில் ஓகோ என வாழ்ந்தவர்கள். ஒரு சிலர் நமக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஒரு சிலர் தாம் பெற்ற பிள்ளைகளை ஈழ போராட்டத்திற்காக அர்பணித்தவர்கள்.
மௌனிக்கப்பட்ட யுத்தம் அவர்களை நம்மிடம் கையேந்த வைத்து விட்டது. அவர்களில் சிலர் நாம் அருகில் சென்றதும் கை நீட்டி யாசகம் கேட்கின்றனர். நம்மில் எத்தனை பேர் அவர்களை திரும்பி பார்க்கின்றோம். உதவ நினைக்கின்றோம். ஒரு சில நபர்களே அவ்வாறு அதிகம்.
மக்கள் புழக்கம் உள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் , மழை என்றும் பாராது மன்னார் நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிளும் வீதி சுற்று வட்டங்களிளும் காத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதுமே ஏமாற்றமே மீதமாகின்றது. அவசர உலகில் நிற்க கூட நேரம் இல்லாத மக்களை கை நீட்டுபவர்களை நிர்கதியாய் நிற்கவிட்டு நகர்கின்றோம்.
அதே போன்று கடந்து போகும் ஒரு நபருடைய கதை – முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளினால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் நிர்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைக்கும் எதோ ஒரு வகையில் நாமும் ஒரு காரணம்.
ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இப்பெரியவர். ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும் மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய்.
எப்போதும் இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சாபம் பின் தொடரும் . இவ்வாறனவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாய் இல்லை அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏளனமாக பார்க்கும் உங்கள் பார்வை எப்போதும் பசியைவிட கொடுமையானது என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இத்தொகுப்பு ஓர் ஊடகனின் கழுகுப்பார்வை…….