170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், வடக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையே இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே, வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 40:60 என்ற இணைந்த நேர அட்டவணை அடிப்படையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க வடபிராந்திய போக்குவரத்துச் சபையும் வடக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் இணக்கம் கண்டன.
வடக்குக்கான சேவையில் ஈடுபடும் வெளி மாகாண பேருந்துகள் வவுனியா பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நண்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற பேச்சுக்களின் பிரகாரம் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதோடு, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
Spread the love