குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கையைப் பார்க்கும் போது, சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் சிங்களவர்களை ஏமாற்றுவதாகவும் தமிழ் மொழியில் தமிழர்களை ஏமாற்றுவதாகவும் இரண்டு மொழிகளிலும் முஸ்லிம்களை ஏமாற்றுவதாகவும் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் நிகழ்வின் இறுதியில் பத்திரிகையாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
‘எந்தவொரு தீர்வாக இருந்தாலும் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும். குருட்டுத் தனமாகவும் இருட்டுத் தனமாகவும் அமையக் கூடாது. நாடாளுமன்றத்தில் அண்மையில் சில தீர்மானங்கள் இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டன. அவை போன்று ஓர் தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது.
இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இந்தத் தீர்வுத் திட்டத்தில் நிறைய ஒழிவு மறைவுகள் உள்ளன. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என மூவின மக்களையும் சந்தேகம் கொள்ள வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது.
எனவே எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும். எந்தவொரு இனமும் ஏனைய இனங்களால் அடக்கப்படாமல் – ஒடுக்கப்படாமல் தன்மானத்துடன் வாழுகின்ற நிலையை உறுதிப்படுத்தும் தீர்வாக அது அமையவேண்டும்’ என மேலும் தெரிவித்தார்.