தமிழகத்தின் பட்டாசு தொழிற்சாலைகளுக்குப் பிரபலமான சிவகாசியில் 11ஆவது நாளாக தொடரும் பட்டாசு தொழிற்சாலை வேலைநிறுத்தத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்தல் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை விரைவில் முடிக்கக் கோரியும், மத்திய அரசு சுற்றுச்சூழல் குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரியும் சிவகாசியில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள் கடந்த 26ஆம் திகதி முதல் வேலைநிறுத்தத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் கடந்த பதினொரு நாட்களாக நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பட்டாசு தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் காரணமாக தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொங்கல் என்றாலே பட்டாசு வெடிகள் வெடிக்க விடப்படும். அந்தப் பொங்கல் பண்டிகை காலத்தில் பட்டாசுகளை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலமை கேள்விக்குள்ளாகியுள்ளமை அந்த மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.