குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.
‘யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அன்றைய தினம் மற்றொரு பெண்ணும் குழந்தை பிரசவித்தார். அவரது சிசு இறந்துவிட்டது. அதனால் வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் எனது இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை அந்தப் பெண்ணுக்கு மாற்றப்பட்டுவிட்டது’ என தாய் ஒருவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்தச் சம்பவம் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றது. இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். விசாரணைகளை காவல்துறையினர் இழுத்தடித்தமையால் வழக்கு நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டது. முறைப்பாட்டாளர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற போதும், அவரால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட மற்றைய பெண் வெளிநாட்டில் உள்ளார்.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மன்று கட்டளையிட்டது. அத்துடன், அதற்கான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் மன்று அறிவித்தல் வழங்கியது.