குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது , வடமாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வேறு மாகாண வைத்தியர்கள் எவ்வாறு வடக்கு வருவார்கள் என தன்னிடம் ஆளுனர் கேள்வி எழுப்பியுள்ளார் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, வடமாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது, அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என ஆளுனரிடம் கேட்டேன்.
அதற்கு ஆளுனர் வடக்கில் உள்ள தமிழ் பேசும் வைத்தியர்கள் கொழும்பில் சென்று கடமையாற்ற விரும்பி இங்கிருந்து வெளியேறி செல்லும் போது அங்குள்ள வைத்தியர்கள் எப்படி இங்கே வந்து கடமையாற்ற விரும்புவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாது. மௌனமாக இருந்தேன் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்தார்.