பத்மாவத் திரைப்படத்துக்கு 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் நிலவிய சிக்கல் தீர்ந்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் படத்தில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து கர்னி சேனா என்ற அமைப்பு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் இப்படம் வரும் 25-ம் திகதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட போதிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்ற ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய 4 மாநில அரசுகள் படத்தைத் திரையிட தடை விதித்திருந்தன.
இந்தநிலையில் இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திரைப்படம் 25-ம் திகதி வெளியாக உள்ளதால், இதனை அவசர வழக்காக விசாரித்து, மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கு குறித்த 4 மாநிலங்கள் பத்மாவத் திரைப்படத்துக்கு விதித்த தடை உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், மாநில அரசுகள் படைப்பாற்றல் உரிமையை துண்டிக்கும் வகையில் தடை விதித்துள்ளது வருத்தமளிக்கிறது எனவும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.