அந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட நபர், சமீபத்தில் கசூர் நகரில் ஜைனப் என்ற சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற அதே நபர் என்பது டி.என்.ஏ சோதனையில் தெரிய வந்திருப்பது பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் வெளியானது. எனினும், தவறு இழைத்ததை மறுத்துள்ள காவல் அதிகாரிகள், கைது செய்ய முற்பட்டபோது அவர் தப்ப முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டார், என்று கூறியுள்ளனர்.
ஜைனப் கொலை வழக்கை விசாரிக்கும் காவல் துறையினர், நான்கு சிறுமிகளின் கொலை வழக்கு உள்பட, இதற்கு முன்பு நடந்த ஏழு சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்குகளில், ஜைனப் கொலைக் குற்றவாளியின் டி.என்.ஏ பொருந்திப்போவதைக் கண்டுபிடித்தனர்.
அவ்வாறு கொல்லப்பட்டவர்களில், பிப்ரவரி 2017இல் கசூர் நகரில் கடத்திப் பள்ளியில் வல்லுறவு செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுமி இமான் ஃபாத்திமாவும் ஒருவர். இதுவரை, ஃபாத்திமா வழக்கு தீர்க்கப்பட்டதாகவே அனைவரும் நம்பினர்.
இமான் ஃபாத்திமா தான் கடத்தப்பட்ட தினத்தன்று, ஐந்து வயதாகும் தனது ஒன்று விட்ட சகோதரர் அடீல் உடன் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தார். தனது தந்தை உடன் இருக்கையில், பிபிசியிடம் பேசிய அடீல், “அந்த நபர் என்னை சுவர் பக்கமாகத் திரும்பி நிற்கச் சொல்லி ஃபாத்திமாவை தூக்கிச் சென்றுவிட்டார். அவளை மேல் தளத்துக்கு தூக்கிச் சென்று ஒரு சாக்குப் பையில் கட்டிக் கடத்திச் சென்றுவிட்டார்,” என்று கூறினார்.
அடீலின் நினைவு சில நேரங்களில் தெளிவற்று, குழம்பும் நிலையில் இருந்தாலும், கடத்தப்பட்ட பின்பு ஃபாத்திமா கொண்டு செல்லப்பட்ட வீடு மற்றும் அவரைக் கடத்திச் சென்ற நபர் ஆகியோரை அடீல் அடையாளம் காட்டியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர் அடையாளம் கட்டிய நபர், 21 வயதாகும் முடாசிர் எனும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்தவர்.
முடாசிர் குறித்து காவல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் தகவல்கள் முரணாக உள்ளன. கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப முயன்றபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிபிசியிடம் பேசிய இன்னொரு காவல் அதிகாரி, அவர் கைது செய்யப்பட்ட பின்பு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் ஒரு தருணத்தில் தப்பியோட முயன்றபோதுதான் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தானில் இருக்கும் மனித உரிமை அமைப்புகள், ‘என்கவுண்டர்’ என்ற பெயரில்காவல் துறையினர் சட்டத்துக்கு புறம்பான கொலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகின்றன.
ஃபாத்திமாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின், அதிகாரிகளின் செயலின்மைக்கு எதிராக உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஒரு மாதம் முன்பு ஜனவரி 2017இல் ஆயிஷா ஆசிஃப் எனும் ஐந்து வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
பிபிசியிடம் பேசிய முடாசிரின் தாய் ஜமீலா பீபி, “நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். என் மகனை அவர்கள் கொன்றுவிட்டனர்,” என்றார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு அண்டை வீட்டார் யாரும் அவர்களுடன் பேசாததால் சில நாட்களிலேயே தாங்கள் கசூர் நகரைவிட்டு வெளியேற வேண்டி இருந்தது என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
ஃபாத்திமா கடத்திக் கொல்லப்பட்ட அதே இரவில் முடாசிர் கைது செய்யப்பட்டதாகவும், காவல் துறையினருடன் சென்று ஒரு உள்ளூர் மருத்துவமனையில் அவரது உடலைப் பெற்றுக்கொண்டதாகவும் முடாசிரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
முடாசிர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதைக் கேட்க தாங்கள் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதாக ஃபாத்திமாவின் உறவினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், முடாசிர் கொலை செய்யவில்லை என்பதை டி.என்.ஏ ஆதாரங்கள் காட்டுகின்றன.
பிபிசியால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள ஆதாரங்களை காண்பித்தபோது, இது குறித்து முழுமையான விசாரணை நடத்தபடும் என்றும் சட்டவிரோதக் கொலைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் பஞ்சாப் மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் மாலிக் அகமது கான் கூறியுள்ளார்.
“ஒரு அப்பாவி கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்,” என்று இமான் ஃபாத்திமாவின் தந்தை பிபிசியிடம் கூறியுள்ளார். “காவல் துறை மீது நான் விவரிக்க முடியாத கோபத்தில் இருக்கிறேன். எங்களுக்கு நீதி வேண்டும். உண்மையான குற்றவாளி பிடிக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.