முப்பது ஆண்டுகளாக நெடுந்தீவில் எந்தவொரு அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்கவில்லை என்பதனால் எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்துள்ளார். யாழ் பாடி விருந்தினர் விடுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திழப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நெடுந்தீவில் அரசியல்கட்சிகள் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் நெடுந்தீவு இன்னும் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். சகல அடிப்படை வசதிகளுடன் தீவக மக்கள் சுபீட்சமான எதிர்காலத்தினை அடையும் வரை தாம் பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு மண்ணில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே தாம் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். கேடயம் சின்னத்தில் 16 பேர் சுயேட்சையாகப் போட்டியிடுவதாகவும் பதவிக்கு வந்தால், மூன்று வருடங்களில் தமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.